BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 31 May 2014

தமிழகத்தில் உள்ள முக்கிய‌ பிரச்சினைகளை தீர்க்கக் கோரி பிரதமருக்கு விஜயகாந்த் கடிதம்


தமிழகத்தில் உள்ள முக்கிய பிரச்சினைகளைத் தீர்க்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:

 "மத்திய அரசு, தமிழகத்தில் உள்ள முக்கிய பிரச்சினைகளைத் தீர்க்க ஆவன செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் பரிதவிக்கின்றனர். கிராமம், நகரம் என்றில்லாமல் அனைத்து மக்களும் குடிநீர் வசதியின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர்ப் பஞ்சத்தைப் போக்கி, அனைத்து மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீர் கிடைக்க வகை செய்யவேண்டும்.

தமிழகத்தில் 70%-க்கும் அதிகமான மக்கள் விவசாயத்தை நம்பியுள்ளனர். சமீப காலமாக விவசாயத்திற்கு போதுமான நீர் ஆதாரம் இல்லாததால் விவசாய உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டு, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, நாட்டிலுள்ள நதிகளை தேசிய மயமாக்கி, அவற்றை இணைத்து, தமிழகத்தின் நீர் ஆதாரத்தை உயர்த்தி, விவசாயம் பெருகவும், விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரவும் வழிவகை காண வேண்டும்.

தமிழகத்தில் கடுமையான மின்பற்றாக்குறையால் பெரும்பாலான மாவட்டங்கள் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. இதன் விளைவாக சிறு, குறு மற்றும் பெருந் தொழிற்சாலைகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் விளைவாக லட்சக் கணக்கான மக்கள் வேலை வாய்ப்பை இழந்து, வறுமையில் வாடுகின்றனர். இந்த நிலை போக்கிட மத்திய அரசின் தமிழ்நாட்டிற்கான மின் ஒதுக்கீட்டினை அதிகரித்து, தடையில்லா மின்சாரம் கொண்டு வந்து, தொழில் உற்பத்தியைப் பெருக்கி, படித்த, மற்றும் படிக்காத இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்.

தமிழகத்தின் தென் கடற்கரையோர மாவட்டங்களில் மணல் மற்றும் கனிம வள கொள்ளை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கான நிதி வருவாய் இழப்பு பெருமளவு அதிகரித்துள்ளது. இந்த கனிம வளங்களைப் பாதுகாக்க இன்னும் கடுமையான சட்டங்களைக் நடைமுறைப்படுத்திட வேண்டும்.

இலங்கை கடற்படையினரால் அன்றாடம் தாக்குதலுக்கு உள்ளாகும் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இலங்கை நமது நட்பு நாடு என்ற பெருந்தன்மையோடு இந்தியா நடந்து கொண்டாலும், இலங்கை அதை மதிப்பதில்லை. அங்கு வாழும் தமிழர்கள் போரினால் மிகவும் பாதிக்கப்பட்டு, மனதளவிலும், உடல் அளவிலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் பகுதிகளில் மீண்டும் குடியேற்றப்பட்டு, அனைத்து மனித உரிமைகளோடு, சிங்களர்களுக்கு இணையாக தமிழர்களும் நடத்தப்படுவதை தங்கள் தலைமையிலான அரசு ஏற்படுத்திட வேண்டும்.

அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்தி, எல்லோருக்கும், எல்லா இடத்திலும் தரமான மருத்துவம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

உயர் கல்வி மற்றும் பள்ளிக் கல்வி தனியார்மயமாக்கப்பட்டதால், தரமான கல்வி என்பது ஏழைகளுக்கு எட்டாக் கனியாகவே உள்ளது. எல்லோருக்கும் சமச்சீரான கல்வி வாய்ப்பு கிடைத்திட அரசுப் பள்ளி, மற்றும் கல்லூரிகளின் எண்ணிக்கையை உயர்த்தி, அதன் தரத்தையும் உயர்த்திட வேண்டும்.

தமிழ்நாட்டிற்கு மத்திய அரசின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைத் திட்டம், மேம்பாலங்கள் போன்றவை மாநில அரசின் ஒத்துழைப்பு இன்மையால் நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்தில் நிறைவேற்றப்படாததால் மாநில வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவைகள் மாநில நிர்வாகத்தின் கீழ் வந்தாலும், பிரச்சினைகளின் முக்கியத்துவத்தைக் கருதி, தனி கவனம் செலுத்தி போர்க்கால அடிப்படையில், மத்திய அரசு, மாநில அரசு, மற்றும் எதிர்க்கட்சிகள் கொண்ட கூட்டுக் குழுவை அமைத்து, தமிழக அரசின் திட்ட செயல்பாடுகளை கண்காணித்து வழி நடத்துதலை தங்கள் தலைமையில் அமைந்துள்ள அரசு செய்யவேண்டும்.

நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஊழலற்ற, வளமான, வலிமையான பாரதத்தை உருவாக்குவோம்."

இவ்வாறு விஜயகாந்த் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media