BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 22 September 2014

தினம் ஒரு மரணம்

பிரேசிலில் நடந்து முடிந்த உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அடுத்த உலகக்கோப்பை 2018-ம் ஆண்டு ரஷ்யாவிலும், அதற்கு அடுத்து 2022-ம் ஆண்டு கத்தாரிலும் நடைபெற இருக்கின்றன. கத்தார் போட்டிக்கு இன்னும் எட்டு ஆண்டுகள் இருக்கின்றன என்றபோதிலும், அதற்கான கட்டுமான வேலைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. உலகம் முழுவதும் இருந்து சுமார் ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் இதற்காகக் குவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் கொத்தடிமைகளைப்போல நடத்தப்படுகிறார்கள் என்ற விமர்சனங்களும், இதுவரை 900-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மரணம் அடைந்திருக்கிறார்கள் என்ற செய்தியும் அதிரவைக்கின்றன.

‘கத்தாரில் உலகக்கோப்பை கால்பந்து’ என்ற செய்தியே பலருக்கு ஆச்சர்யமாக இருந்தது. அந்தச் செய்தியின் பின்னாலேயே ‘உலகக் கால்பந்து சம்மேளனமான ஃபிஃபா-வுக்கு லஞ்சம் கொடுத்துதான் உலகக்கோப்பை நடத்தும் வாய்ப்பை கத்தார் பெற்றது’ என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து, அதன்மீதான விசாரணைகளும் இப்போது நடைபெற்று வருகின்றன.

இது ஒருபக்கம் இருக்க… தொழிலாளர்களை கத்தார் நடத்தும்விதம்தான் குலைநடுங்க வைக்கிறது. இதுகுறித்து லண்டனில் இருந்து வெளியாகும் ‘தி கார்டியன்’ பத்திரிகை நடத்திய புலனாய்வில், தொழிலாளர்கள் கொத்தடிமைகள்போல நடத்தப்படுவதும், மிகச் சிறிய அறைகளில் 12-க்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டிருப்பதும், கழிவறையைவிட மோசமான நிலையில் அவர்களின் வசிப்பிடம் இருப்பதும் அதிரவைக்கின்றன.

 தொழிலாளர்களில் 90 சதவிகிதத்தினர், இந்தியா, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்தே சென்றுள்ளனர். இவர்களால் கத்தார் நாட்டின் கொடுமையான வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் 105 முதல் 110 டிகிரி வரை வெயில் அங்கு சர்வசாதாரணம். நேபாளம் போன்ற குளிர்நாட்டுத் தொழிலாளி ஒருவர், இந்தக் கொடிய வெயிலை எப்படித் தாங்குவார்? விளைவு… விதவிதமான நோய்கள் தொழிலாளிகளைத் தாக்கி, அவர்கள் செத்து வீழ்கின்றனர். 2012-13ம் ஆண்டில் நேபாளம், இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 964 தொழிலாளர்கள் கத்தாரில் இறந்துள்ளனர். இவர்களில் 246 பேர் திடீர் மாரடைப்பில் மரணம் அடைந்துள்ளனர். 35 பேர் கட்டுமான தளங்களில் இருந்து விழுந்தும், 28 பேர் தற்கொலை செய்துகொண்டும் இறந்துள்ளனர். 2014-ம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரையில் மட்டும் நேபாளத் தொழிலாளர்கள் 87 பேர் இறந்துள்ளனர். இந்த எண்ணிக்கைகள் அனைத்தும் அதிகாரபூர்வமானவை. இதே நிலை நீடித்தால், மொத்தமாக உலகக்கோப்பை கட்டுமான வேலைகள் முடிவடையும்போது சுமார் 4,000 தொழிலாளர்கள் இறந்திருப்பார்கள் என்கின்றன அதிர்ச்சி புள்ளிவிவரங்கள். இப்போது, கிட்டத்தட்ட தினசரி ஒருவர் என்ற விகிதத்தில் மரணம் நிகழ்கிறது. இந்தக் கொடுமை ஒரு பக்கம் இருக்க… கடந்த 13 மாதங்களாக தொழிலாளர்களுக்கு ஒரு ரூபாய்கூட சம்பளம் வழங்கப்படவில்லை என்பது இன்னும் பெரிய அதிர்ச்சி.
”கத்தாருக்குப் போனால் வாழ்க்கையின் துயரங்கள் முடிவுக்கு வந்துவிடும் என்று நினைத்து இங்கு வந்தேன். எனக்கு இரண்டு குழந்தைகள். போன் செய்யும்போது எல்லாம் ‘அப்பா, எப்போ ஊருக்கு வருவீங்க?’ என்று கேட்கிறார்கள். ‘பணம் அனுப்பி ஆறு மாசம் ஆச்சு…’ என்று மனைவி தயங்கித் தயங்கிச் சொல்கிறாள். அவளிடம் எனக்குச் சம்பளமே தரப்படவில்லை என்பதையும் நான் பட்டினி கிடப்பதையும் எப்படிச் சொல்வது? நான் கத்தார் வருவதற்காக வாங்கிய கடனுக்கான வட்டி அதிகரிக்கிறது. குடும்பத்தை ஓட்ட என் மனைவி மேலும் கடன்களை வாங்குகிறாள். எனக்கோ ஊருக்குப் போக டிக்கெட் எடுக்கக்கூட காசு இல்லை. ஒன்றுமே புரியவில்லை. நான் ஊருக்குத் திரும்பிப் போவேனா என்பது சந்தேகமாக இருக்கிறது. அனேகமாக இவர்கள் உலகக்கோப்பை நடத்தும்போது என் பிள்ளைகளைக்கூட பார்க்காமல் நான் இங்கேயே இறந்திருப்பேன் என்று நினைக்கிறேன்” என்று பாகிஸ்தானைச் சேர்ந்த யாசின் முகமது பேசுவதைக் கேட்கையில் மனது பிசைகிறது.

சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னஸ்டி இன்டர்நேஷனல் உள்ளிட்ட பலர் இந்தப் போக்கைக் கண்டித்துள்ள நிலையில், இந்த ஆண்டு வெயில் காலத்தில் பணிபுரிவதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், நடந்த மரணங்களுக்கு நீதியும் இல்லை; தரப்படாத சம்பளம் குறித்த உறுதியும் இல்லை. அரசு, ஒப்பந்த நிறுவனம், அவர்களின் துணை ஒப்பந்த நிறுவனங்கள், அவர்களின் கீழ் வேலைக்கு ஆட்களைச் சேர்க்கும் நிறுவனங்கள் என்று இது ஒரு சங்கிலிபோல நீண்டு செல்வதால், ஒருவரை ஒருவர் கை காட்டி தப்பித்துக்கொள்கின்றனர். 2022-ம் ஆண்டு கத்தாரில் உலகக்கோப்பை நடத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ள ஜூன், ஜூலை மாதங்களில் அங்கு கடுமையான வெயில் நிலவும். இந்த வெப்பம் விளையாட்டு வீரர்களின் திறனைப் பாதிக்கும், வருகை தரும் ரசிகர்களைப் பாதிக்கும் என்பதால், அதைச் சமாளிக்க என்ன செய்யலாம் என்ற யோசனைகள் பேசப்படுகின்றன. ஆனால், மிகக் கொடுமையான வெயிலில் நேரடியாக நின்று பணிபுரியும் தொழிலாளர்களின் நலன்கள் எந்த வகையிலும் பொருட்படுத்தப்படவில்லை.

உலகக்கோப்பை கால்பந்தால்… ரசிகர்களுக்கு உற்சாகம்; நடத்தும் நிறுவனங்களுக்குப் பணம்; தொழிலாளர்களுக்கு… மரணம்!


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media