BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 6 September 2014

தமிழரின் பெருமையும், பேரழிவும்

இயற்கையும் அழகும் அறிவும் ஆற்றலும் மனிதர்களாகிய எமக்கு இன்பத்தை அள்ளிவழங்கும் அமுதசுரபிகளாக இருக்கின்றன. ஆனால் அவையே துன்பத்தையும் கொட்டித் தருகின்றன என்பதே மிகக்கசப்பான உண்மையாகும். இந்த இன்ப துன்ப தராசுத் தட்டுகளிடையே துலாக்கோலின் நாக்குப்போல் இருப்பவன் ஞானியாகின்றான். மற்றவர்களில் பலர் இன்பத்திற்காக ஏங்கி ஏங்கி துன்பப்பட்டு அழிந்து ஒழிந்து போக, சிலரோ இன்பத்தில் திளைத்தும் துன்பத்தில் துவண்டும் போகின்றனர். இவர்கள் இன்பமெனச் சில பொழுதையும் துன்பமெனச் சில பொழுதையும் கழிக்கின்றார்கள். இந்த இன்ப துன்பங்களின் வரைவிலக்கணம் தான் என்ன?

மாங்காயைக் கடித்த ஒருவன் அதன் புளிப்பால் நாக்கூச முகத்தைச் சுழித்து காறி உமிழ்கின்றான். அதே மாங்காயைக் கடித்த மற்றவனோ ரசித்து ருசித்து மகிழ்ந்து உண்கின்றான். ஒரே மாங்காய் ஒருவனுக்கு இன்பத்தையும் மற்றவனுக்கு துன்பத்தையும் கொடுத்தது ஏன்? அது மாங்காயின் குறையா? இல்லையே! அவர்களின் உணர்வுகளின் வெளிப்பாட்டையே இன்ப துன்ப அனுபவங்களாக நாம் கண்டோம். எனவே இன்ப துன்பங்களுக்கு மன உணர்வுகளே காரணம் ஆகின்றது.

திருவள்ளுவரும் இன்ப துன்பங்களுக்கு வரைவிலக்கணம் கூறாது நன்மை வரும் பொழுது நல்லவை என்று பார்த்து மகிழ்ந்தவர்கள் தீமை வரும் பொழுது துன்பப்படுவது ஏன்? எனக் கேள்வி எழுப்புவதன் மூலமாக விதியே (ஊழே) அதற்கான காரணம் என்கின்றார்.

“நன்றுஆங்கால் நல்லவாக் காண்பவர் அன்றுஆங்கால்
அல்லற் படுவது எவன்”
- திருக்குறள் (379)

திருவள்ளுவரின் இக்கூற்றுப்படி ஆக்கமும் அழிவும் கூட மனித இன்ப துன்பங்களுக்கு காரணமாக அமைகின்றன. ஆக்கமும் அழிவும் மாறி மாறி சுழலும் சக்கரமாக இருப்பதை பல வழிகளில் நாம் கண்கூடாகப் பார்க்கின்றோம். ஒன்றின் ஆக்கத்திற்காக இன்னொன்று அழிக்கப்படுகின்றது. அதாவது ஒன்றை அழித்தே இன்னொன்றை உருவாக்கிக் கொள்கின்றோம்.
இயற்கையாக செழித்து வளர்ந்த மரத்திலிருந்து வீடு, கட்டில், தொட்டில், மேசை, நாற்காலி என எத்தனை பொருட்களை விதவிதமாக மனிதன் உண்டாக்கிக் கொள்கின்றான். ஏன் நான் எழுதிக் கொண்டிருக்கும் இந்த தாள் கூட மரத்தை அழித்து ஆக்கியது தானே! மனிதர்களின் ஆடம்பர வாழ்வுக்காக காடுகள் அழிக்கப்பட்டு உலகம் நகரமயமாக ஆக்கப்படுகின்றது. இதனால் இயற்கையில் ஏற்படும் காலநிலை மாற்றம் மாபெரும் அனர்த்தங்களை பேரழிவுகளை உலகிற்கு தரவிருக்கின்றது.

எரிமலை, நிலநடுக்கம், சூறாவளி, சுனாமி, பனி, உருகுபனி, இடி, மின்னல், மழை, வௌ;ளப்பெருக்கு, தொற்றுநோற்கள் என இயற்கையால் ஏற்படும் பேரழிவுகள் எத்தனை? எத்தனை? இந்தப் பேரழிவுகளை எல்லாம் தடுப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்ப்படுகின்றன என்பதை உலகோருக்குக் காட்ட என்றே வருடத்தில் ஒரு தினம் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. அத்தினம் எப்போது வருகின்றது என்பது எம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? காதலர் தினம் எப்போ வரும்? என்றால் உடனே பெப்ரவரி 14 என்று சொல்லத் தெரிந்த எமக்கு உலகப்பேரழிவுத் தடுப்புத்தினம் ஒக்டோபர் 14 என்பது தெரியாது. விஞ்ஞான அறிவில் இயற்கையையும் விஞ்சிவிட்டோம் என இன்றைய மனிதர்களாகிய எம்மால் சொல்லமுடியுமா? முடியாது. ஏனெனில் நாம் இயற்கையின் வட்டத்திற்குள் இருந்து விலகி வெகுதூரம் வந்துவிட்டோம். ஆனால் அன்றைய மனிதர் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தனர். ஈழத்தின் பேராற்றங்கரையில் நின்று யாதும் ஊரே யாவரும் கேளிர் என முழங்கிய மணிபூங்குன்றனாரே

மரஞ்சா மருந்தும் கொள்ளார் மாந்தர்
- நற்றிணை 226.1

மனிதர்கள் மருந்துக்காகக் கூட மரம் செத்துப் போகும்படி, மரத்திலிருந்து மருந்திற்கு தேவையான பகுதிகளை எடுக்கமாட்டார்கள் என்று கூறியுள்ளார். தம்மைப்போல மரங்களையும் தமிழர் நேசித்ததை இந்த நற்றிணைப் பாடல் வரி எமக்கு எடுத்துக்காட்டுகின்றது. எம் மூதாதையரிடம் இருந்த இந்த இயற்கை நேயம் எம்மைவிட்டு எங்கே போயிற்று? அதுமட்டுமா போயிற்று?
இன்னும் எத்தனை எத்தனை கண்டுபிடிப்புக்கள் மாற்றார் வீட்டுப் பெட்டகங்களில் உறங்கி புதுப்பெலிவுடன் புதுஉடை உடுத்து அன்னநடை நடந்து எம்முன்னே வலம்வருகின்றன.

செஞ்ஞாயிற்றுச் செலவும்
அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளி திரி தரு திசையும்
வறிது நிலைஇய காயமும் என்றிவை
சென்றளந்து அறிந்தார் போல என்றும்
இனைத்து என்போரும் உளரே…
- புறநானூறு :30:1-7

சூரியனின் இயக்கமும் அவ்வியக்கத்தால் சூழப்பட்ட மண்டிலமும், காற்றுச் சுழலும் திசையும் ஒருவித ஆதாரமுமின்றி தானே நிற்கும் ஆகாயமும் என்று சொல்லப்படுகின்ற இவற்றை எல்லாம் சென்று அளந்து அறிந்தவர் போல எப்பொழுதும் இதுயிது இப்படிப்பட்ட அளவையுடையன என்று சொல்லும் கல்வியறிவுடையோரும் இருக்கின்றனர். எங்கே போயிற்று இந்த வானியல் அறிவு?

தமிழரின் அறுவகை நிலப்பண்புகளுக்கு அமைய மலையிலும் காட்டிலும் வயலிலும் கடலிலும் பாலைவனத்திலும் அந்தந்த மக்களின் பண்பாய் ஒலித்த பண்கள் எங்கே? குறிஞ்சியாழ், முல்லையாழ், மருதயாழ், பாலையாழ், முல்லைக்குழல், ஆம்பற்குழல் என இருந்த யாழ்களும் குழல்களும் எப்படி அழிந்தன?

புரிநரம்பு இன்கொளப் புகல்பாலை ஏழும்
எழுப்புணர் யாழும் இசையும் கூடக்
குழலளந்து நிற்ப முழவெழுந்து ஆர்ப்ப
மன்மகளிர் சென்னியர் ஆடல் தொடங்க
- பரிபாடல் 7:77-80

ஆதாரசுருதியாய் குழலிசை அளந்து நிற்க நடந்த அந்த ஆடல் வடிவத்திற்கு என்ன நடந்தது? தமிழரின் ஓவியக்கலையும் சிற்பக்கலையும் எங்கே ஓடி ஒளித்தன? சித்தமருத்துவமும் யோகமும் சிதைந்து போனது ஏன்? இறந்தவனையே தமிழர் எழுப்பினான் என்கின்றது இருக்கு வேதம். அப்படி இருக்க எப்படி எமக்கு முதல்நூல்கள் ஆயின இந்த வேதங்கள்? ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற தமிழர் மத்தியில் சாதிவேறுபாடும் சமயமாறுபாடும் எங்கிருந்து வந்து புகுந்தன? நிறைமொழி மாந்தராய் வாழ்ந்த தமிழர் பிறமொழி மந்திரத்தில் மயங்கியது எப்படி?

இயற்கையும் பெரும் போர்ப்படைகளும் இரசாயன, உயிரியற் குண்டுகளும் செய்யமுடியாத மாபெரும் கலாச்சாரப் பேரழிவை தமிழர் தாமே தமக்குச் செய்து கொண்டிருக்கின்றனர் என்பதே மறுக்க முடியாத உண்மையாகும். கூலிக்கு மாரடிக்கும் தற்குறிகள் இருக்கும் மட்டும் இதுபோல் பேரழிவுகள் தொடரும் எனச் சொல்லி தப்பிப்பது அழகல்ல. கையில் வெண்ணைய் இருக்க நெய்க்கு அலைபவர் நாம். எமது பெருமை எமக்குத் தெரியாது. வேற்று மொழிக்கார் தமிழைப் படித்து அதனை அவர்களது மொழியில் எழுதிய பின்னர் நாம் அந்த மொழிபெயர்ப்பை படித்து அவர் எப்படி எல்லாம் எழுதி இருக்கின்றார் தெரியுமா? என அங்கலாய்ப்போம். யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டது போல தமிழர்களாகிய நாமே தமிழைப்படிக்காது பேசாது பேரழிவை உண்டாக்கிக் கொண்டோம்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media