BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 30 September 2014

பொருளாதார நோய்களுக்கான மருந்து
அமெரிக்கப் பொருளாதாரத்தின் தொடர் சரிவைத் தடுத்து நிறுத்த ஃபெடரல் ரிசர்வ் வங்கியால் (Fed) கையாளப்பட்ட அசாதாரணமான ஆயுதம் குவான்டிடேடிவ் ஈஸிங் (Quantitative Easing). இதன்படி, 2012-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், மாதத்திற்கு 85 பில்லியன் டாலர் மதிப்பிலான கடன் பத்திரங்கள் சந்தையிலிருந்து வாங்கப்பட்டு, பணப்புழக்கம் அதிகரிக்கப்பட்டது.பெரிய தொழில் முதலீடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு, கடனுக்கான வட்டி விகிதம் 0-25 என்ற அளவிலேயே நிர்வகிக்கப்பட்டு வந்தது. அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட காயத்துக்கு மருந்தாக இந்தப் பொருளாதார நடவடிக்கைகள் அமைந்தது எனலாம்.

இந்தத் திடீர் பணப்புழக்கம், அமெரிக்கா மட்டுமல்லாது, அதிக வருவாயுடன் கூடிய முதலீடுகளுக்கு வாய்ப்பளித்த இந்தியா போன்ற வளரும் நாடுகளையும் சென்றடைந்தது.  ஆனால், இம்மாதிரி முதலீடுகள் நிரந்தரமானது அல்ல என்பதை அனைவரும் விரைவில் உணர ஆரம்பித்தனர்.
அதற்குக் காரணம், அமெரிக்கப் பொருளாதாரம் மேம்பட ஆரம்பித்ததற்கான அறிகுறிகள் வெளிப்படத் துவங்கியதும், "ஃபெட்' பணப்புழக்கத்தை படிப்படியாக குறைத்துவிடும் என்பதுதான்.ஒவ்வொரு காலாண்டு இடைவெளியிலும், அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பற்றிய ஆய்வுகள் "ஃபெட்' இயக்குநர் குழுவால் விவாதிக்கப்படுகின்றன. பொருளாதார காயத்துக்கு செலுத்திய மருந்து சரிவர வேலை செய்கிறதா என்பது ஆராயப்படுகிறது. காயம் குணமானதன் அளவீட்டைப் பொருத்து, பணப்புழக்க டோசேஜ் மாற்றப்பட்டு, சிகிச்சை நீடிப்பு அல்லது நிறுத்தல் முடிவு செய்யப்படும்.இந்தக்குழுவின் முடிவுகள் வெளியாவதற்கு சில நாள்களுக்கு முன்பே, உலகப் பொருளாதார சந்தைகள் சற்று ஆட்டம் காண ஆரம்பித்து விடுவது வழக்கமாகிவிட்டது எனலாம். 

கடந்த செப்டம்பர் மூன்றாவது வாரத்தில், "ஃபெட்' வட்டி விகிதத்தை உயர்த்தும் நடவடிக்கையை டிசம்பர் மாத அறிக்கையை வெளியிடும் என்று எதிர்பார்த்து சந்தை கிலியுடன் காத்திருந்தது.அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்ந்தால், வளரும் நாடுகளிலிருந்து மூலதனங்கள் பெருமளவில் வெளியேறிவிடும் என்பதுதான் அந்தப் பயத்திற்கு காரணமாகும். வட்டி விகிதம் உயர்த்தப்படுவதற்கான காலம் முற்றிலும் கனியவில்லை என்பதால் அந்த முடிவை "ஃபெட்' அடுத்த வருடம் முதல் பகுதிக்கு தள்ளிப்போட்டதற்கான அறிவிப்பு கடந்த 17ம் தேதி வெளிவந்தது.இந்த அறிவிப்பு, இந்தியா போன்ற நாடுகளுக்கு சற்று இதம் அளிக்கும் வகையில் அமைந்தது. கூடுதல் பணப்புழக்கத்தை உடனடியாக நிறுத்தாமல், சந்தையிலிருந்து வாங்கப்படும் அரசு சார்ந்த கடன் பத்திரங்களின் மதிப்பு, மாதம் 15 பில்லியன் டாலராக குறைக்கப்பட்டிக்கிறது. அமெரிக்கப் பொருளாதார முன்னேற்ற அறிகுறிகளால், உலக நாணயங்களுக்கு எதிரான டாலரின் மதிப்பு கூடி வருகிறது. இதன் உடனடி எதிரொலியாக, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த 18-ஆம் தேதியன்று 61.11 வரை சரிந்தது. சர்வ தேச தங்கம் விலை ஒரு அவுன்ஸூக்கு அதன் சப்போர்ட் லெவலான 1240 டாலரை உடைத்து 1216 டாலர் வரை சென்றது. இது மேலும் 1180 டாலர் வரை கீழ்நோக்கிச் செல்லலாம். இந்திய ரூபாயின் மதிப்பைப் பொருத்து, இந்தியாவில் தங்கம் விலை ரூ.24,500-ஐ இவ்வாண்டு இறுதிக்குள் தொட்டு விடும் என்றே தோன்றுகிறது.சமீபத்தில், ஐரோப்பிய மத்திய வங்கி, பொருளாதார ஊக்குவிப்புக் கொள்கையின் ஒரு பகுதியாக வட்டி விகிதங்களை அதிரடியாக குறைத்து, 700 பில்லியன் ஈரோ (சுமார் 901 பில்லியன் டாலர்) அளவில், சந்தையில் கடன் பத்திரங்களை வாங்கி, பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கையை அறிவித்திருக்கிறது.
அமெரிக்க முதலீடுகள் குறைந்தாலும், ஐரோப்பிய நாடுகளின் பணப்புழக்கத்தினால் விளையும் தாற்காலிக முதலீடுகள் இந்தியாவுக்கு கை கொடுக்கும் என்ற நம்பிக்கை துளிர்த்துள்ளது.

கடந்த ஜூன் மாத நிலவரப்படி, இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, 4.8 சதவீதத்திலிருந்து (21.8 பில்லியன்) 1.7 சதவீதமாக (7.8 பில்லியன் டாலர்) குறைந்திருப்பது நல்ல செய்தியாகும். எதிர்பாராத உலகப் பொருளாதார எதிர்மறை நிகழ்வுகளிலிருந்து தற்காத்துக் கொள்ளும் விதமாக, அந்நியச் செலாவணி கையிருப்பை கவனமாகக் கையாள்வதன் அவசியத்தை உணர்ந்திருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.   கடந்த ஆகஸ்ட் மாதத்தில், ஏற்றுமதி 2.35 சதவீதம் (26.95 பில்லியன் டாலர்) குறைந்திருப்பது சற்று கவலையளிக்கும் செய்தியாகும். டீ, காபி, அரிசி, புகையிலை, மசாலா பொருள்கள், எண்ணெய் வகைகள், இரும்புத் தாது, பெட்ரோலியம் பொருள்களின் ஏற்றுமதி அளவு வெகுவாக குறைந்திருப்பது இதற்கு முக்கியக் காரணம். ஏற்றுமதியில் இறங்குமுகத்திற்கு ஐரோப்பிய பொருளாதாரத்தின் மந்த நிலைமை  ஒரு முக்கிய காரணமாகும். அரசாங்கத்தின் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையை எதிர்பார்த்து ஏற்றுமதி வர்த்தகத் துறையினர் காத்திருக்கின்றனர்.

உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் இந்தியப் பொருள்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை அமையும் என்று எதிர்ப்பார்ப்பதாக இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் கூறியுள்ளார். உலகச் சந்தைகளின் ஒரு பகுதியில் சரிவு ஏற்படும்போது, மற்ற பகுதிகளை விரிவடையச் செய்யும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். வட்டி விகிதத்தில் சலுகை மற்றும் ஊக்குவிப்பு தொகைகள் (Infrastructure facilities) மூலம் மட்டும் ஏற்றுமதியை மேம்படுத்தி விடமுடியாது. ஏற்றுமதி தொழில் திட்டங்களுக்கான அங்கீகார நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல், தடையில்லாத மின்சாரம், தொழிலாளர் கொள்கைகளில் தற்கால நடைமுறைக்கேற்ற சீர்திருத்தங்கள், உற்பத்திப் பொருள்கள் குறைந்த நேரத்திலும், செலவிலும் துறைமுகங்களைச் சென்றடைவதற்கான சாலை கட்டமைப்பு வசதிகள், ஏற்றுமதி வர்த்தக கழங்களின் (Export promotion councils) நடவடிக்கைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றைப் போர்க்கால அடிப்படையில் அரசாங்கம் மேற்கொள்வதுதான் இதற்கான நிரந்தரத் தீர்வாகும். 40  சதவீதத்திற்கு மேற்பட்ட  சிறு தொழில் நிறுவனங்கள் ஏற்றுமதித் துறையை சார்ந்திருக்கின்றன. ஏற்றுமதித் துறையின் வளர்ச்சியால், சிறு தொழில் வளர்ந்து, அந்த வளர்ச்சி, வேலையில்லா திண்டாட்டத்தைக்  குறைக்கும். ஏற்றுமதித் துறைக்கு தேவையான தனித்திறமைகளை அறியாமல் பலர் ஒதுங்கி நிற்கின்றனர்.

ஏற்றுமதியின் அவசியத்தை உணர்த்தி, ஏற்றுமதியாளர்களை உருவாக்கும் பாடத்திட்டங்கள், கல்வி நிலையங்களில் அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்தக் குறையை களையலாம்.பிரதமரின் சுதந்திர தின உரையில் இடம் பெற்ற "மேக் இன் இன்டியா' அறைகூவல் செயல் வடிவம் பெற்றுக்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். அமெரிக்கா, ஜப்பான், கொரியா, ல்வீடன், போலந்து, ஆஸ்திரேலியா, சீனா, இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருக்கும் 3,000-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு, இந்தியா தனது உற்பத்தி பொருள்களை தயாரித்து, உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்படி அழைப்பு விடுத்திருக்கிறது. இந்த முயற்சிகள் வெற்றி பெற்றால்,  உள்நாட்டுத் துணைத் தொழில்கள் வளர்ச்சி அடைந்து, இந்திய ஜி.டி.பி. உயர்வதற்கு அது பெரும் உந்துதலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

மேலே குறிப்பிட்டது போல், தடையற்ற வர்த்தகத்திற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள்  (Infrastructure facilities) விரைவில் மேம்படுத்தப்பட்டால்தான், இந்த முயற்சிகள் வெற்றியடையும்.உள்நாட்டுத் தொழில் உற்பத்தி வளர்ச்சிக்கு உதவும் விதமாக, கடனுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்படவேண்டும் என்று கோரிக்கைகள் எழுப்பப்படுகின்றன.சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த எ-20 மாநாட்டில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, வட்டி விகிதங்களை  இந்திய ரிசர்வ் வங்கி மேலும் உயர்த்த வேண்டும் என்று சர்வதேச பொருளாதார நிதியகம் (I.M.F) வலியுறுத்தி உள்ளது.சமீபத்திய புள்ளிவிவரப்படி (IIP data) நாட்டின் தொழில் உற்பத்தி 0.5 சதவீத அளவில் குறைந்துள்ளது. பணவீக்கத்தின் அளவு ஏற்ற இறக்கத்துடன் நிலையற்று காணப்படுகிறது.
நாட்டின் தொழில் வளர்ச்சி,  பணவீக்கக் கட்டுப்பாடு ஆகிய இரண்டு முக்கிய அம்சங்களுக்கும் பாதகம் விளைவிக்காமல், வட்டி விகிதக் கொள்கைகளை வகுப்பது கூர்மையான கத்தி மேல் நடப்பது போன்ற ஒரு சாதுர்யமான நடவடிக்கை என்றுதான் சொல்ல வேண்டும்.  

பொருளாதார நோய்களுக்கான மருந்தின் ஒரு பகுதிதான் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ளது. பொருளாதார மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் போன்ற வீரியம் மிகுந்த மருந்துகளை அரசாங்கத்தால்தான் செலுத்த முடியும்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைவரும், இந்திய நலனை மையமாகக் கொண்டு ஒருமித்த கருத்துடன் செயல்பட்டால், எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சி என்பது தொட்டு விடும் தூரத்தில்தான் என்பதில் சந்தேகமில்லை


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media