BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 28 September 2014

ஐ.நா. அமைப்பு உகந்த இடமல்ல: ஐ.நா. பொதுச் சபையில் மோடி உரை

இரு தரப்பு விவகாரமான காஷ்மீர் பிரச்னையை எழுப்புவதற்கு ஐ.நா. பொதுச் சபை உகந்த இடமல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். காஷ்மீர் பிரச்னை குறித்து ஐ.நா. பொதுச் சபையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் வெள்ளிக்கிழமை பேசியதற்கு பதிலடி தரும் வகையில் அவர் இவ்வாறு பேசினார்.

இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு முதல்முதலாக ஐ.நா. பொதுச் சபையில் பிரதமர் மோடி சனிக்கிழமை உரையாற்றினார். அதன் விவரம்:
காஷ்மீர் பிரச்னையை ஐ.நா. பொதுச் சபையில் எழுப்புவது, இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைக்கு உகந்ததல்ல. (காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி நவாஸ் ஷெரீஃப் பேசியதற்கு பதிலளிக்கும் வகையில் மோடி மறைமுகமாக இவ்வாறு பேசினார்).

தீவிரவாதத்தின் சுவடே இல்லாத, சுமுகமான சூழ்நிலையில் பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த விரும்புகிறேன். இருநாட்டு நல்லுறவையும், தோழமையையும் வலுப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் சீரிய முறையில் ஈடுபடத் தயாராக இருக்கிறேன். அதற்கு முன்பாக, அப்படியொரு சுமுகமான சூழ்நிலையை உருவாக்க வேண்டியது தனது பொறுப்பு என்பதை உணர்ந்துகொண்டு பாகிஸ்தான் செயல்பட வேண்டும்.

வெள்ள நிவாரணத்துக்கு உதவி: இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி நினைத்துப் பார்க்க வேண்டும். மிகப்பெரிய அளவில் அங்கு மீட்புப் பணிகளை மேற்கொண்டோம். வெள்ள பாதிப்புக்கு ஆளான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கும் உதவிகளை அளிக்க முன் வந்தோம்.

அண்டை நாடுகளுடன் சுமுக உறவு: அண்டை நாடுகளுடன் நல்லுறவு வைத்திருக்கும் நாடுதான் வளர்ச்சியை எட்டும். அந்தவகையில், பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டைய நாடுகளுடன் நல்லுறவைப் பேண வேண்டும் என்பதற்கு இந்திய அரசு அதிகபட்ச முன்னுரிமையை அளித்து வருகிறது.
சிறிய நாடுகளுக்கு உதவி: வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றான இந்தியா, தன்னிடம் இருக்கும் ஓரளவு வளத்தைக்கூட, உதவி கேட்கும் சிறிய நாடுகளுக்கு வழங்கத் தயாராக இருக்கிறது.

அமைதிக்கு அச்சுறுத்தல்: உலக அளவில் பெரிய யுத்தங்கள் நிகழவில்லை என்றாலும் ஆசியா உள்ளிட்ட சில பிராந்தியங்களில் சண்டைகளும், அமைதியைச் சீர்குலைக்கும் வாய்ப்புகளும் உருவாகும் நிலை உள்ளது. ஆசியா - பசிபிக் பிராந்தியத்தில் கடல் போக்குவரத்து பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவுவது கவலையளிக்கிறது. மேற்கு ஆசியப் பகுதிகளில் நடைபெறும் கிளர்ச்சிகளினாலும் அமைதி சீர்குலைகிறது.

தீவிரவாதத்தை களைவோம்: நாடுகள் இடையேயான வேற்றுமைகளைக் களைந்துவிட்டு தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்வோம். சர்வதேச தீவிரவாதத்தைக் களைவதற்கான கூட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

ஐ.நா.வுக்கு முக்கியத்துவம்: ஐ.நா. சபை இருக்கும்போது 'ஜி' அமைப்புகளை ஏற்படுத்துவது தேவைதானா என்பதை உலக நாடுகள் சிந்திக்க வேண்டும். பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்துவது உள்ளிட்ட ஐ.நா. சீர்திருத்தங்கள் விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தச் சபையில் உரையாற்றியதில் பெருமை கொள்கிறேன் என்றார் மோடி.

193 நாடுகள் பங்கேற்ற இந்தப் பொதுச் சபைக் கூட்டத்தில் மோடி சுமார் 35 நிமிடங்களுக்கு ஹிந்தியில் பேசினார். முன்னதாக, ஐ.நா. பொதுச்செயலர் பாங்-கீ-மூனை நரேந்திர மோடி சந்தித்தபோது காஷ்மீர் பிரச்னையை ஐ.நா.பொதுச் சபையில் நவாஸ் எழுப்பியது முறையற்றது என்றும் இருதரப்பிலான பிரச்னைகளை எழுப்புவதற்கு ஐ.நா. பொதுச்சபை உகந்த அமைப்பல்ல என்று தெரிவித்தார்.

இந்திய-அமெரிக்கர்கள் வரவேற்பு: முன்னதாக, ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக வருகைதந்த மோடியை, ஏராளமான இந்திய அமெரிக்கர்கள் வாழ்த்துக் கோஷங்களுடன் வரவேற்றனர். "நியூயார்க் மோடியை விரும்புகிறது', "அமெரிக்கா மோடியை விரும்புகிறது' என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் அவர்கள் கையில் ஏந்தியபடி வரவேற்பு அளித்தனர்


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media