BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 17 September 2014

தமிழ் இலக்கியங்களில் ஓசோன்

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் வந்த தமிழ் இலக்கியங்களில் ஓசோன் . தற்கால அறிவியல் அறிஞர்களால் புவிக்கு மேலே இருக்கும் வான்வெளி ஆறு பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.


புவியில் இருந்து ஒன்றன் மேல் ஒன்றாக


ட்ரோபோஸ்பியர்
(troposphere)
ஸ்ட்ரோட்ஸ்பியர்
(stratosphere)
மீஸோஸ்பியர் (mesosphere)
தெர்மாஸ்பியர்
(thermosphere)
எக்ஸோஸ்பியர் (exosphere)
நத்திங்னஸ் (nothingness)
 
என அவை அமைந்துள்ளன.இவற்றுள் புவிக்கு மேலே முதலில் அமைந்திருப்பது ட்ரோபோஸ்பியர். இது வான்வெளியின் மொத்த கன அளவில் பதினேழில் ஒரு பங்குதான். ஆனால், வான்வெளியில் உள்ள மொத்தக் காற்றின் அளவில் ஐந்தில் நான்கு பகுதி இங்கு தான் இருக்கிறது. இன்றைக்கு ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்கள் வான்வெளியை ஐந்து கூறுகளாகப் பிரித்துக் கூறி இருப்பதை அறியும்போது வியப்பும் மகிழ்வும், பெருமிதமும் ஒருங்கே உண்டாகின்றன.


"இருமுந்நீர்க் குட்டமும்
வியன் ஞாலத்து அகலமும்
வளிவழங்கு திசையும்
வறிதுநிலைஇய
ஆகாயமும்." (புறநா - 20)

என்னும் வரிகளில் புவிக்கு மேல் உள்ள மூன்று பகுதிகள் கூறப்பட்டுள்ளன.

"செஞ்ஞாயிற்றுச்
செலவும்
அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்
சூழ்ந்த மண்டிலமும்
வளிதரு திசையும்
வறிதுநிலை காயமும்." (புறநா -
30)
என்னும் வரிகளால் புவிக்கு மேல் ஐந்து பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

"மயங்கிருங் கருவிய
விசும்பு முகனாக
இயங்கிய இருசுடர்
கண்ணெனப் பெயரிய
வளியிடை வழங்கா வழக்கறு நீத்தம்."
                                                            (புறநா -365)
 
என்னும் வரிகளில் இரண்டு பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இவற்றுள் "திசை" என்னும் பகுதியில் காற்று இருக்கும். "ஆகாயம்", "நீத்தம்" என்னும் பகுதிகளில் எதுவும் இருக்காது எனவும் கூறப்பட்டுள்ளது. "நீத்தம்" என்பது இன்றைய அறிவியலார் கூறும் "வெறுமை" (நத்திங்னஸ்) என்னும் பகுதி. புவிக்கு மேல் இருக்கின்றஇரண்டாவது பகுதியான "ஸ்ட்ரோட்ஸ்பியர்" என்னும் பகுதியில் தான் "ஓசோன்" எனப்படும் காற்றுப்படலம் அமைந்துள்ளது.

இப்படலம் கதிரவனிடம் இருந்து வரும் கடும் வெப்பத்தை, தான் தாங்கிக்கொண்டு புவியில் உள்ள உயிர்கள் துன்பம் உறாமல் காத்துவருகிறது. 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஓசோன் படலத்தைப் பற்றி 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் குறிப்பிட்டிருப்பது வியப்பை அளிக்கிறது அல்லவா?

"நிலமிசை வாழ்வர் அலமரல்
தீர
தெறுகதிர்
வெம்மை கனலி தாங்கி
காலுண வாக
சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவரும்
மருள." (புறநா - 43)
 
என்னும் பாடல் வரிகளின் கருத்து, "புவியில் வாழும் மக்களின் துன்பம் தீர கதிரவனின் வெப்பம் மிக்க கனலைத் தாங்கிக்கொண்டு கதிரவனோடு சேர்ந்து சுழல்கின்ற முனிவர்கள்" என்பதாகும். மேலும், முருகக் கடவுளின் ஒரு கை,

"விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது"
 
என்று திருமுருகாற்றுப்படை (107) யிலும்,

"சுடரொடு திரிதரும் முனிவரும், அமரரும் இடர்கெட அருளி நின்
இணையடி தொழுதோம்"
 
 என சிலப்பதிகாரத்திலும் (வேட்டுவ வரி - 18) இக்கருத்து கூறப்பட்டுள்ளது

 
 முனிவர்கள் என்று கூறப்பட்டதாலேயே , மற்ற மதத்தினரும்  பகுத்தறிவு  வாதிகளும் இது அறிவியல் கருத்தன்று; கற்பகமரம், காமதேனு போன்ற கற்பனைகளுள் ஒன்று தான் என்று சொல்லக் கூடும். முனிவர்கள் என்றாலும் சரி அல்லது பிறவற்றைச் சுட்டினாலும் சரி அது ஒரு பொருட்டன்று. கதிரவனின் வெப்பத்தைத் தாங்கிக் கொள்ளும் ஒரு சக்தியைப் பற்றித் தமிழர்கள் (சங்கப் புலவர்கள்) சிந்தித்திருக்கிறார்கள் என்னும் செய்தி நாம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே கூறிவிட்டோம் என்று நினைக்கும் போது, இந்த செந்தமிழ்நாட்டில் பிறந்ததை எண்ணி நாம் பெருமை கொள்ளவேண்டும்.அப்படிப்பட்ட நம் தமிழ் மொழியை உலகெங்கும் பரவ வழிவகை செய்ய ஒவ்வொரு தமிழனும் உறுதி ஏற்கவேண்டும் .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media