BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 30 September 2014

ஜெயலலிதாவுக்கு தண்டனை - கார்ப்பரேட்டுகளின் விளையாட்டு - ஆளும்வர்க்க கூட்டு

அன்னா ஹசாரேக்களும், அரவிந்த் கெஜிரிவால்களும் ஊழல் எதிர்ப்பியக்கங்கள் நடத்தி தமிழ்நாடு கொந்தளிக்கவில்லை. ஜெயலலிதா மக்களால் வெறுக்கப்பட்டு, மக்களின் கோபத்திற்கு ஆளாகி, இக்கட்டான நிலையில், வேறு வழியே இல்லாமல் தண்டிக்கப்படவில்லை. இவ்வகையில் ஆளும்வர்க்கம் தங்களில் ஒருவரை பலிகொடுத்து தங்களின் அதிகார அமைப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் தற்போது தமிழ்நாட்டில் இல்லை.

2ஜி அலைக்கற்றை வழக்கில் தள்ளாடும் கருணாநிதியின் தி.மு.க குடும்ப ஓடம் ஜெயலலிதாவை வீழ்த்துமளவு லாபி செய்யவில்லை. லாபி செய்ய மத்தியிலோ, மாநிலத்திலோ அதற்கு பலமும் இல்லை. ஜெயலலிதாவின் கதி தனக்கும் நேரும் என்பது புரியாமலிருக்க நியாயமில்லை.

தி.மு.க-வை அண்டி அரசியல் செய்ய பி.ஜே.பி முயற்சிக்கவில்லை. நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா என்ற நேர்மையாளர் இந்த வழக்கின் மூலம் நீதியை நிலைநாட்டியே தீருவேன் என்று போராடி பொறுப்பை பெற்று ஜெயலலிதாவை தண்டிக்கவில்லை.

ஆனால் வளைந்து கொடுக்காதவர் என பேர் பெற்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹாவிடம் ஜெயலலிதா சிக்க வைக்கப்பட்டுள்ளார். எழுத்தாளரும், வழக்குரைஞருமான தோழர் இரா.முருகவேள் கேட்கிற "... குன்ஹா நல்லவர், வல்லவர், வளைந்து கொடுக்காதவர். எல்லாம் சரிதான். ஆனால் அவர் எப்படி எல்லாச் செல்வாக்கையும் தாண்டி இந்தக் குறிப்பிட்ட நீதிமன்றத்திற்கு வந்தார்?..." கேள்வி முக்கியமானது.

குன்ஹாவை இவ்வழக்கில் தற்போதைய மத்திய பாஜக அரசு நியமிக்கவில்லை. 2013 அக்டோபர் 31-ல் அவர் இவ்வழக்கில் நியமிக்கப்பட்ட போது காங்கிரசு ஆட்சியில் இருந்தது. காங்கிரசு ஜெயலலிதாவை தன்நலத்தாலோ, தனது கூட்டாளியான தி.மு.க-வின் நலத்தாலோ பழிவாங்குவதற்காக குன்ஹாவை நியமித்திருந்தால் ஜெயலலிதா பாஜகவின் தயவால் அவரை மாற்றியிருக்க முடியும். ஜெயலலிதாவை பாஜக மூலம் காப்பாற்றுவதற்கு சோ மாதிரியான வலுவான ஆட்கள் இருக்கவே செய்கிறார்கள்.

ஜெயலலிதாவின் கோரிக்கையைப் புறக்கணித்து அவரை பழி வாங்குவதற்கான அவசியம் எதுவும் பாஜகவுக்கு தற்போது இல்லை. ஆக ஜெயலலிதாவால் சரிகட்ட முடியாத சக்தி ஒன்று இவ்வழக்கை சமீப காலத்தில் பயன்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா - சோ - பாஜக‌ எல்லாவற்றையும் மீறிய அந்த சக்தி ஏதாவது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கார்பரேட் முதலாளிகளாகத்தான் இருக்க வேண்டும்.

ஜெயலலிதாவின் உலகமயமாக்கலுக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளும் - கார்ப்பரேட்டுகளின் சிக்கலும்

ஜெயலலிதா உலகமயமாக்கலை தாராளமாக நடைமுறைப்படுத்தவே செய்கிறார். அதற்கு விளக்கம் எதுவும் தேவையில்லை. காங்கிரசு மட்டும் உலகமயமாக்கத்திற்கு எதிராகவா இருந்தது? அதன் வேகமும், மூர்க்கத்தனமும் போதாமல்தானே கார்ப்பரேட்டுகள் மோடியை தயாரித்து ஆர்.எஸ்.எஸ்-ஐ ஆட்சியில் அமர்த்தியுள்ளன‌.

ஜெயலலிதாவிடம் வேகம் குறைவில்லை. ஆனால் கார்ப்பரேட்டுகளுக்கு தேவையான துறைகளை அவர்களிடம் ஒப்படைக்காமல் இருக்கிறார். தோழர் இரா.முருகவேள் கூறுவதைப்போல் "... அரசு என்பது தண்ணீர், போக்குவரத்து, மருத்துவம் போன்ற சேவைகளை வழங்குவதை நிறுத்த வேண்டும் என்றுதான் உலக வங்கியும், IMF- ம், பன்னாட்டு நிறுவனங்களும் சொல்லி வருகின்றன. அரசு சேவைத்துறைகளில் முதலீடு செய்வதை இவர்கள் விரும்புவதில்லை... ஆனால் இவர்கள் சொல்வதை அப்படியே கேட்டால் இன்னும் ஆயிரம் வருடங்களுக்கு ஆட்சிக்கு வர முடியாது என்பது அம்மாவுக்குத் தெரியும். எனவே அம்மா திட்டமிட்ட ஒரு ரிஸ்க் எடுத்தார். அம்மா குடிநீர், அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா சிமெண்ட் என்று ஓட்டுக்காக தாராளமயம் தனியார் மயத்தை அம்மா பின்னோக்கித் தள்ளுகிறார்... பாசாங்குக்குக் கூட மக்கள் நல அரசை விரும்பாத கார்பரேட் முதலாளிகள் இந்தத் தீர்ப்பின் மூலம் ஒரு எச்சரிக்கை கொடுக்கிறார்கள்..." என்பதை மறுப்பதற்கில்லை.

கார்ப்பரேட்டுகளின் நலனோடு பாஜகவின் நலன் இணங்குகிறது

கார்பரேட் முதலாளிகளின் லாபவேட்டைக்கு இந்தியா முழுவதும் ஒற்றை சர்வாதிகார ஆட்சியை விரும்பியே இந்துத்துவ பாசிச அரசியலுக்கு அத்தனை செலவுகள் செய்யப்பட்டது. பாஜகவும் காங்கிரசைப்போல் திராவிட கட்சிகளின் முதுகில் சவாரி செய்து கொண்டிருக்க விரும்பவில்லை. தனிப்பெரும் சக்தியாக வளரவே துடிக்கிறது. ஆகவே தனது இந்துத்துவ தத்துவமான "ஒரு வீடு நல்லாயிருக்க வீட்டில் ஒருவரை இழக்கலாம்" என்று பார்ப்பனரானாலும் ஜெயலலிதாவை பலி கொடுத்துவிட்டது. அடுத்து அது தி.மு.க-வையும் பலியெடுக்க வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டுள்ள‌து.

இந்த விடயத்தில் கர்நாடக அதிகார வர்க்கத்திற்கும் சிறிது பங்கிருக்கவே வாய்ப்புள்ளது. கார்ப்பரேட்டுகளையும், அவர்களின் அந்நிய மூலதனத்தையும் கவர்வதில் கர்நாடகம் தமிழ்நாட்டின் போட்டியை சமாளிக்க முடியாமல் திணறித்தான் கிடக்கிறது. பல சலுகைகளைக் காட்டி தமிழ்நாட்டிலுள்ள நிறுவனங்களை கர்நாடகம் தட்டிக்கொண்டும் போயுள்ளது. ஆகவே கார்ப்பரேட்டுகளின் மனதை குளிரவைக்க கர்நாடகம் ஆர்வம் காட்டவே செய்திருக்கும். அது நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹாவின் வடிவத்திலானதாகவும் இருந்திருக்கும்.

தோழர் பாஸ்கர் கூறும் "ஆளும் வர்க்கமானது போலி மோதல் படுகொலைகளை மேற்கொள்ளத் தயாராக உள்ள குறிப்பிட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரை பொறுக்கியெடுத்து செய்ய வைப்பதைப் போலவே குறிப்பிட்ட தீர்ப்புகளை வழங்குவதற்கு நீதிபதிகளும் பொறுக்கியெடுக்கப்படுகிறார்கள். அத்தீர்ப்புகள் ஒரு பொருளில் ஏற்கத்தக்கவையாக இருக்கலாம். அது கேள்வியல்ல. குறிப்பிட்ட இந்த வழக்கிற்கு குறிப்பிட்ட இந்த நீதிபதியை பொறுக்கியெடுத்தது எதன் அடிப்படையில்? இவ்வழக்கில் இந்த நீதிபதியும் இதற்கு முன்னிருந்த சில நீதிபதிகளும் அரசு வழக்குரைஞர்களும் ஒப்பீட்டளவில் கறாராக இருந்தனர். இவர்களை இப்பொறுப்புகளுக்கு தெரிந்தெடுத்த கர்னாடக அரசாங்கங்களும் உயர் நீதிமன்றமும் randomஆக செய்யவில்லை. ஒப்பீட்டளவில் கறாராக இருக்கத் தயாராக இருந்தோரே அப்பொறுப்புகளுக்கு பொறுக்கியெடுக்கப்பட்டனர். ஆளும் வர்க்கங்களுக்கு இடையிலான உள் முரண்பாடே இதற்கு அடிப்படை." இந்த கருத்தை மறுப்பதற்கில்லை.

ஆக ஜெயலலிதா மீதான நடவடிக்கையை ஒரு நீதிபதியின் தனிப்பட்ட நேர்மையென்றோ அல்லது நீதிமன்றம் தமது புனிதத்தை காக்கும் நடவடிக்கையென்றோ அல்லது பொத்தம்பொதுவான ஆளும்வர்க்க முரண்பாடென்றோ காலம் கடந்தேனும் நீதி வென்றதென்றோ கூறிவிட முடியாது. இது கார்ப்பரேட்டுகளின் அதிகார விளையாட்டு. அவர்கள் அரைகுறையான ஆட்டங்களை விரும்புவதில்லை.

- திருப்பூர் குணா
https://www.facebook.com/guna.tiruppur
நன்றி கீற்று.காம்


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media