BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 23 September 2014

தமிழகத்தில் வெளி மாநிலத்தவர்கள் சிக்கலுக்காக சென்னையில் மாநாடு - அதிர்வை ஏற்படுத்தும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

தமிழகத்தில் மண்ணின் மைந்தர்கள் பெரும்பாண்மை இழந்து அயலவர்கள் அதிக அளவில் ஆகும் நிலை உருவாகிக்கொண்டுள்ளது, கடந்த காலங்களில் தெலுங்க, மராட்டியர்கள் குடியேறினர், தற்போது சாரி சாரியாக குடியேறும் வட மாநில தொழிலாளர்கள் ஆகியோரால் தமிழ்நாட்டில் தமிழர்கள் பெரும்பாண்மை இழக்கும் அபாயம் உள்ளது.

யுனைட்டட் கிங்டம்(யுகே) என்பது ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, வட அயர்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய வெவ்வேறு நாடுகள் பல்வேறு காலகட்டங்களில் இணைக்கப்பட்டு கிரேட் பிரிட்டன் ஆக மாறியது. 307 ஆண்டுகளுக்கு முன் இப்படியாக கிரேட் பிரிட்டனுடன் இணைக்கப்பட்ட நாடு ஸ்காட்லாந்து, 300 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்காட்லாந்து தனி நாடாக சுதந்திரம் பெற வேண்டும் என்று பலரும் பல்வேறு வகையில் போராடி வருகின்றனர், இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் ஸ்காட்லாந்து தனியாக பிரிந்து செல்லலாமா என்று வாக்கெடுப்பு நடைபெற்றது, அதிர்ச்சியளிக்கும் வகையில் ஸ்காட்லாந்து யுகேவில் இருந்து பிரிய வேண்டாம் என்று 54% மக்கள் முடிவெடுத்தனர், மேலோட்டமாக  பார்க்கும் போது ஸ்காட்லாந்து மக்கள் விடுதலையை விரும்பவில்லை என்று தோன்றும், ஆனால் உண்மையில் ஸ்காட்லாந்தில் பிறந்து தற்போது வேறு இடங்களில் வசித்து வரும் மண்ணின் மைந்தர்களுக்கு இந்த தேர்தலில் கலந்து கொள்ள வாக்குரிமை அளிக்கப்படவில்லை, அதே நேரத்தில் இங்கிலாந்து, அயர்லாந்து போன்ற பகுதிகளில் இருந்து ஸ்காட்லாந்தில் குடியேறி வாழும் ஸ்காட்லாந்து மண்ணின் மைந்தர்கள் அல்லாத பிற பகுதியினருக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது, விளைவு ஸ்காட்லாந்து சுதந்திரம் வேண்டாம் என்று வாக்கெடுப்பு தெரிவிக்கிறது, இதே நிலை தமிழகம் உட்பட இந்தியாவில் பல மாநிலங்களில் நடைபெறுகிறது.

செப்டம்பர் 10 அன்று மணிப்பூரில் மாநிலத்தின் அனைத்துக் கல்வி நிலையங்களுக்கும் காலவரையற்ற விடுமுறை அளிப்பதாக, அம்மாநில முதலமைச்சர் இபோபி அறிவித்தார். ஆனால், அதனையும் மீறி அங்கு மாணவர்களும், பெண்களும் என மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. INNER LINE PROTEST MANIPUR என இணையத்தில் தேடினால் மணிப்பூரில் நடைபெற்று வரும் போராட்ட விடயங்களை படிக்கலாம்.

“இந்தியர்கள் அனைவரும் சமம்” - “எந்த இந்தியரும் எந்த மாநிலங்களுக்குச் சென்று வேண்டுமானாலும் தொழில் - வணிகங்களில் ஈடுபடலாம்” என்றெல்லாம் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அது உண்மையல்ல!

வடகிழக்கு மாநிலங்களிலும், காசுமீரிலும் பிற மாநிலத்தவர் நிலம் வாங்கத் தடை உள்ளது. கர்நாடகத்தில் விளை நிலங்களை பிற மாநிலத்தவர் வாங்கத் தடை உள்ளது.  அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், நாகாலாந்து மாநிலங்களில் தொழில் - வணிகம் - வேலை வாய்ப்பு ஆகியவற்றை பிற மாநிலத்தவர் பெற வேண்டுமெனில், அம்மாநில அரசிடம் பெர்மிட் வாங்க வேண்டும். நடைமுறையில், இந்த பெர்மிட் முறை, வெளிநாடுகளுக்குச் செல்ல வாங்கும் 'விசா' முறைக்கு சமமானது.

மணிப்பூர் மாநிலத்திலுள்ளவர்களின் நலன் காக்க, இதே போன்ற பர்மிட் முறையை தங்கள் மாநிலத்திலும் செயல்படுத்த வேண்டும் என்பதே, இன்றைக்கு மணிப்பூர் மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கை. அதற்காகத்தான், அம்மாநிலத்தின் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், திருநங்கையர் என அனைவரும் கடும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

தற்போது, இதே கோரிக்கையை தமிழகத்தில் எழுப்பியுள்ளது. தமிழீழம் - தமிழர் பிரச்சினைகளில் போராடி வரும் பெ.மணியரசன் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

வரும் செப்டம்பர் 28 - ஞாயிறு அன்று, சென்னை தி.நகரில், தமிழகத்திலும் பிற மாநிலத்தவர் சொத்து வாங்கத் தடை விதிக்க வேண்டுமென்றும், தமிழகம் - புதுச்சேரியில் பிற மாநிலத்தவர் குடியேற பர்மிட் முறை வேண்டும் என்றும் கோரி, அவ்வமைப்பு மாநிலம் தழுவிய சிறப்பு மாநாட்டை நடத்துகின்றது.

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், இயக்குநர் மு.களஞ்சியம், திராவிட முன்னேற்ற மக்கள் கழகத் தலைவர் ஞானசேகரன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இம்மாநாட்டில் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி என்ற பெயரில் செயல்பட்டு வந்த இவ்வமைப்பினர்தான், ஏற்கெனவே, முல்லைப் பெரியாறு சிக்கலின் போது, அதிரடியாக மலையாள ஆலூக்காஸ் நகைக் கடைகளைத் தாக்கியும், தஞ்சைக்கு சுற்றுலா வந்த புத்த பிக்குகளை வெளியேற்றியும் சிறை சென்றவர்கள். எனவே, தமிழ்த் தேசியப் பேரியக்கம் என்ற புதிய பெயரில், தமிழகத்தில் வெளிமாநிலத்தவர் சிக்கலுக்காக நடத்தப்படும் இவர்கள் நடத்தும் மாநாடு, என்னென்ன அதிர்வலைகளை ஏற்படுத்தும் எனத் தெரியவில்லை. 


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media