BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 23 November 2014

நாளை கூடுகிறது நாடாளுமன்றம் : 67 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம்

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை (நவம்பர் 24) தொடங்குகிறது. வரும் டிசம்பர் 23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தொடர், 22 அமர்வுகளைக் கொண்டதாக இருக்கும்.முந்தைய கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பது புதிய மசோதாக்கள், 15-ஆவது மக்களவையில் (ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த போது) நிலுவையில் உள்ள 47 மசோதாக்கள், அதற்கு முந்தைய மக்களவையில் நிலுவையில் உள்ள 18 மசோதாக்கள் உள்பட மொத்தம் 67 மசோதாக்களை இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.நிலுவை மசோதாக்கள்: மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு கடந்த மே மாதம் அமைந்த பிறகு, கடந்த ஜூலையில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிகழாண்டுக்கான பட்ஜெட்டை நிறைவேற்றும் நடவடிக்கைகளுக்கு மட்டுமே மத்திய அரசு முன்னுரிமை கொடுத்தது.இதனால், மத்திய சுகாதாரத் துறை தொடர்புடைய மன நல பராமரிப்பு சட்டத் திருத்த மசோதா; மருந்துகள், அழகு சாதனப் பொருள்கள் சட்டத் திருத்த மசோதா; ஹெச்ஐவி எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சட்டத் திருத்த மசோதா; மத்திய தொழிலாளர் நலத் துறையுடன் தொடர்புடைய பயிற்சியாளர்கள் சட்டத் திருத்த மசோதா; தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதா; குழந்தைத் தொழிலாளர்கள் முறை ஒழிப்பு மற்றும் விதிகளை முறைப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதா; கட்டுமானத் தொழிலாளர்கள் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் மட்டும் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதேபோல, முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் மாற்றுத் திறனாளிகள் உரிமை மசோதா, சிறார் நீதி மசோதா, தொழிற்சாலைகள் மசோதா, ரயில்வே சட்டத் திருத்த மசோதா, தீர்ப்பாயங்கள் சேவை மசோதா உள்ளிட்ட மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு நிலைக் குழுக்களின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.இந்தியக் காப்பீட்டு நிறுவனங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் 49 சதவீத அளவுக்கு நேரடி முதலீடு செய்ய வகை செய்யும் காப்பீட்டுச் சட்டங்கள் திருத்த மசோதாவுக்கு மாநிலங்களவையில் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. இதனால், அந்த மசோதாவை நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் (செலக்ட் கமிட்டி) ஆய்வுக்கு மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரி அனுப்பி வைத்துள்ளார்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலக்கரிச் சுரங்கம் (சிறப்பு பிரிவு) அவசரச் சட்டத்தையும், ஜவுளி நிறுவனங்களை தேசியமயமாக்க வகை செய்யும் அவசரச் சட்டத் திருத்தத்தையும் மத்திய அரசு கொண்டு வந்தது. அவற்றை முறைப்படி இரு அவைகளிலும் அறிமுகப்படுத்தி நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.புதிய மசோதாக்கள்: இதே போல, உயிரி மருத்துவ ஆராய்ச்சி; திட்டமிடல், கட்டடக்கலை கல்லூரி உள்ளிட்டவை தொடர்பான சில முக்கிய மசோதாக்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு உத்தேசித்துள்ளது. யுபிஎஸ்சி தேர்வில் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் விவகாரத்தை வட மாநிலங்களைச் சேர்ந்த தேர்வெழுதுவோர் பிரச்னையாக்கினர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், யுபிஎஸ்சி தேர்வெழுதுவோரின் வயது வரம்பைக் குறைக்க மத்திய அரசு உத்தேசித்து வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. எனவே, வரும் கூட்டத்தொடரில் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுக்கும் என்று தெரிகிறது.

முந்தைய கூட்டத்தொடரின் போது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி இடம் பெற்றிருந்தது. அண்மையில் நடந்து முடிந்த மகராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, இந்தக் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. இதையடுத்து, கூட்டணி பலம் குறைந்த நிலையில், வரும் கூட்டத்தொடரை காங்கிரஸ் எதிர்கொள்ளவுள்ளது.முதலாம் நாள் அலுவல்: பிஜு ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த கந்தமால் தொகுதி உறுப்பினர் ஹேமேந்திர சந்திர சிங் கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதியும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கபில் கிருஷ்ண தாகூர் கடந்த அக்டோபர் 13-ஆம் தேதியும் காலமானார்கள். இதையடுத்து, அவை வழக்கத்தின்படி மக்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு முதல் நாள் அலுவல் நாள் முழுவதுமாக ஒத்திவைக்கப்படும் என்று மக்களவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
முந்தைய நாடாளுமன்றக் கூட்டத்தொடர், பட்ஜெட்டை நிறைவேற்ற முன்னுரிமை அளித்த நிகழ்வாக இருந்தது. ஆனால், எதிர்வரும் கூட்டத்தொடர்தான் உண்மையிலேயே மோடி அரசின் செயல்திறனுக்கு சவால் விடுக்கும் நிகழ்வாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

மாநிலப் பிரச்னைகளுக்கு நேரம் ஒதுக்க வேண்டுகோள் : வரும் குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த நாடாளுமன்றத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தை மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தில்லியில் சனிக்கிழமை இரவு கூட்டினார். இதில் மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை, பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, மக்களவை அதிமுக குழுத் தலைவர் டாக்டர் பி. வேணுகோபால், லோக் ஜன சக்தி தலைவரும், மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வான் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மாநில நலன்கள் சார்ந்து உறுப்பினர்கள் முன்வைக்கும் பிரச்னைகளை அவையில் எழுப்ப நேரம் ஒதுக்க வேண்டும் என்று சுமித்ரா மகாஜனை கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கேட்டுக் கொண்டனர். இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, மக்களவை, மாநிலங்களவை ஆகியவற்றில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் அவைத் தலைவர்கள் கூட்டத்தை ஞாயிற்றுக்கிழமை நடத்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media