BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 3 November 2014

கருப்புப் பணம் முழுவதையும் மீட்போம்: பிரதமர் மோடி உறுதிவெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை முழுவதுமாக மீட்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு மோடி இரண்டாவது முறையாக ஞாயிற்றுக்கிழமை, வானொலி மூலம் "மன் கீ பாத்' என்ற நிகழ்ச்சி மூலம் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது: வெளிநாடுகளில் இருந்து கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவர முடியும் என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு உண்டு. இதைச் செய்து முடிப்பதற்கான முயற்சிகளில் எந்தக் குறைபாடும் இல்லை. உங்கள் (மக்களின்) ஆதரவு தொடர வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவருவதற்கான அணுகுமுறையில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், கருப்புப் பணத்தை மீட்பதில் நான் உறுதியுடன் இருக்கிறேன். இந்த விவகாரத்தில், முதன்மைச் சேவகனான என் மீது இந்த நாடு நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். இந்த நாட்டின் ஏழை மக்களுக்குச் சொந்தமான பணம் வெளியே சென்றுள்ளது. அதன் ஒவ்வொரு பைசாவும் நாட்டுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். இதுவே எனது லட்சியமாகும்.

வெளிநாடுகளில் எவ்வளவு கருப்புப் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது எனக்கும் தெரியாது; உங்களுக்கும் தெரியாது; யாருக்கும் தெரியாது. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிடமும் இது தொடர்பான மதிப்பீடு ஏதும் இல்லை. கருப்புப் பணத்தின் அளவு குறித்து அவரவரும் சொந்தமாக ஒரு கணக்கைப் போட்டு வைத்துள்ளனர். அந்த மதிப்பீடுகள் குறித்து விவாதிக்க நான் விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமோ, அவை அனைத்தும் விரைவில் எடுக்கப்படும். கல்வி உதவித்தொகை: நாட்டில் உள்ள சிறப்புத் திறன் வாய்ந்த குழந்தைகள் 1000 பேருக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மூலம் சிறப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இத்தகைய குழந்தைகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுப்பதற்காக கேந்திரீய வித்யாலயப் பள்ளிகளுக்கு தலா ரூ.1 லட்சம் அளிக்கப்படும். நாட்டில் நல்ல தொடக்கம் ஏற்பட்டுள்ளது. நாடு மிகப்பெரிய மாற்றத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்ற அனைத்துத் துறை பிரபலங்களும், பொதுமக்களும் பாராட்டுக்குரியவர்கள். இது தேசிய அளவிலான பிரசார இயக்கமாக மாறும் என்று யாரும் எதிர்பார்த்தார்களா? இதற்கு மக்களின் விழிப்புணர்ச்சியே காரணம் என்றார் மோடி.

"பொது மக்கள் தகவல் கொடுக்கலாம்'

கருப்புப் பண பதுக்கல் தொடர்பாக உறுதியானத் தகவல்கள் கிடைத்தால், பொதுமக்கள் உடனடியாகத் தெரிவிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்கும் முயற்சியாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.பி.ஷா தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து, அந்தக் குழுவின் துணைத் தலைவர் அரிஜித் பசாயத், தில்லியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: கருப்புப் பண பதுக்கல் தொடர்பான ரகசியத் தகவல்களை பொதுமக்கள் அளிக்கும் வகையில் புதிய வழிமுறைகளை நீதிபதி எம்.பி.ஷா விரைவில் அறிவிக்கவுள்ளார். கருப்புப் பணம் பற்றிய விவரங்களை மின்னஞ்சல் மூலமாகவோ, தபால் மூலமாகவோ சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு பொதுமக்கள் அனுப்பி வைக்கலாம். பொதுமக்கள் தரும் தகவல்கள், சட்ட விரோதமாகவும், வரி ஏய்ப்பு மூலமாகவும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தைக் கண்டறிவதற்கு உதவும்.

எனினும், அனுப்பப்படும் தகவல்கள் உறுதியானவையாக இருக்க வேண்டும்.
கருப்புப் பணம் வைத்திருப்பவரின் பெயர், வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்ட முக்கியத் தகவல்களை அனுப்பி வைத்தால், அதனடிப்படையில் விசாரணை நடத்தப்படும். கருப்புப் பணத்தை மீட்பதில் சிறப்புப் புலனாய்வுக் குழுவுடன் பொதுமக்களும் இணைந்து பங்காற்ற வேண்டும் என்பதற்காக இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது என்று அரிஜித் பசாயத் கூறினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media