BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 30 November 2014

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு அமைப்புகள் சதி : ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டுபாகிஸ்தான் அரசு சார்ந்த அமைப்புகளே இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க முயற்சிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டினார். அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த காவல்துறைத் தலைவர்களின் மாநாடு சனிக்கிழமை தொடங்கியது. உளவுத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாநாட்டை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடக்கி வைத்துப் பேசியதாவது: பாகிஸ்தான் அரசுக்கு தொடர்பில்லாத சில இயக்கங்களே இந்தியாவில் நாசவேலைகளில் ஈடுபடுவதாக அந்நாடு தெரிவித்துள்ளது. ஆனால், பாகிஸ்தானின் அங்கீகரிக்கப்பட்ட உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. மூலமாகவே இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல்கள் அரங்கேறி வருகின்றன. அப்படியானால், "ஐ.எஸ்.ஐ. அமைப்பு' பாகிஸ்தானின் அரசு சாராத இயக்கமா? ஜம்மு-காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் பாகிஸ்தான் தாராளமாக உதவிகளைச் செய்து வருகிறது.

அல்-காய்தா அமைப்பு ஒரு சவால்தான்: இந்திய துணைக் கண்டத்தில் தனது கிளையைத் தொடங்கவுள்ளதாக அல்காய்தா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் அஸ்ஸாம், குஜராத், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளையும், வங்கதேசத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு நடக்க அனுமதிக்க மாட்டோம். சிரியா, இராக் நாடுகளில் அல்-காய்தா பயங்கரவாத அமைப்பு தோன்றியிருந்தாலும் கூட, இந்திய துணைக் கண்டத்தில் அதன் தாக்கம் இருக்காது என்று நாம் உறுதியாகக் கூற முடியாது. எனவே, அல்-காய்தா அமைப்பை ஓர் சவாலாகவே ஏற்று அதனை ஒடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்திய முஸ்லிம்கள் தேசபக்தர்கள்: இந்தியாவில் அதிக அளவில் இஸ்லாமியர்கள் உள்ளதால் அவர்களை தங்கள் ஆதரவாளர்களாக மாற்றி, இஸ்லாமிய தேசத்தை உருவாக்க பயங்கரவாதிகள் திட்டமிடுகின்றனர். எனவே, இந்தியாதான் அவர்களின் முதல் குறியாக உள்ளது. ஆனால், இந்திய முஸ்லிம்கள் தேசபக்தி நிறைந்தவர்கள். நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் எழுந்தால் அதனை எதிர்த்துப் போராட அவர்கள் எப்போதும் தயாராக இருப்பார்கள். இதனால் பயங்கரவாதிகளின் எண்ணம் இந்தியாவில் என்றுமே ஈடேறாது. பாடம் புகட்டிய ஜம்மு-காஷ்மீர் மக்கள்: ஜம்மு-காஷ்மீரில் முன்பைவிட தற்போது வன்முறைச் செயல்கள் வெகுவாகக் குறைந்துள்ளன. அங்குள்ள பயங்கரவாத அமைப்புகளால் உள்ளூர் இளைஞர்களைத் தங்களுக்கு ஆதரவாக செயல்பட வைக்க அவர்களால் முடியவில்லை. பயங்கரவாதிகளின் எதிர்ப்பையும் மீறி ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற முதல்கட்ட பேரவைத் தேர்தலில் ஏராளமானோர் வாக்களித்ததன் மூலம் மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்டிவிட்டனர். பயங்கரவாத அமைப்புகள் மீதான அச்சம் குறைந்துள்ளதையே இது உணர்த்துகிறது. பேச்சுவார்த்தை நடத்தத் தயார்: நாட்டில் தற்போது 10 மாநிலங்களில் மட்டுமே மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் காணப்படுகிறது. மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது. அதற்கு முதலில் அவர்கள் வன்முறையைக் கைவிட வேண்டும். மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் திறமையான அதிகாரிகளை மாநில அரசுகள் நியமிக்க வேண்டும்.

வடகிழக்குப் பிராந்திய பிரச்னைகள்: போதிய வளர்ச்சி, உள்கட்டமைப்பு, பொருளாதார வசதிகள் ஆகியவை இல்லாததால் வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு பிரச்னைகள் நிலவுகின்றன. அங்கு வாழும் மக்களின் நலனுக்காக அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என உறுதியளிக்கிறேன். காவல்துறை இன்றியமையாதது: நாட்டின் பாதுகாப்பில் காவல்துறையும், உளவுத்துறையுமே முக்கியப் பங்கு வகிக்கின்றன. மக்கள் அச்சமின்றி இருப்பதற்கு காவல்துறையின் பங்கு இன்றியமையதாதது ஆகும். எதிர்காலத்தில் காவல்துறையை நவீனமயமாக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார் ராஜ்நாத் சிங். இந்த மாநாட்டின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமையன்று, பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்."ஐ.எஸ். அமைப்பால் இளைஞர்கள் ஈர்க்கப்படுவது கவலையளிக்கிறது'
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பால் இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு வருவது கவலையளிப்பதாக உள்ளது என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது: மேற்குவங்கத்தில் பர்த்வான் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு ஜமாத்-அல்-முஜாகிதீன் அமைப்பே காரணம் எனக் கூறப்படுகிறது. வெளிநாடுகளைச் சேர்ந்த பயங்கரவாத சக்திகள், தங்களின் செயல்களை அரங்கேற்ற இந்திய மண்ணைப் பயன்படுத்த முனைகின்றன. இது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பால் இந்திய இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு வருவது மிகுந்த கவலை தரும் விஷயமாக உள்ளது. இந்த விவகாரத்தை சவாலாகக் கருதி மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும். ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்காக போரிட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட மும்பையைச் சேர்ந்த ஆரிஃப் மஜீத் என்ற இளைஞரை தேசியப் புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ளனர். சட்டத்தின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதே தவிர, அந்த இளைஞரை துன்புறுத்துவதற்காக அல்ல என்றார் அவர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media