BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 12 December 2014

ரஷியாவுடன் 20 ஒப்பந்தங்கள் : மோடி-புதின் முன்னிலையில் கையெழுத்து

எண்ணெய், எரிவாயு, பாதுகாப்பு, முதலீடு உள்ளிட்ட துறைகளில் இந்தியா -ரஷியா இடையே வியாழக்கிழமை 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மோடி, புதின் முன்னிலையில் கையெழுத்தான இந்த ஒப்பந்தங்களின்படி, இந்தியாவில் அதிநவீன ஹெலிகாப்டர்களை ரஷியா தயாரிக்கும். இந்தியாவில் அடுத்த 20 ஆண்டுகளில் 12 அணு உலைகளையும் அந்நாடு அமைத்துக் கொடுக்கும். இந்தியா வந்த ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் வியாழக்கிழமை நடைபெற்ற வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். அப்போது இரு தலைவர்களும் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதித்தனர். மூன்றரை மணிநேரத்துக்கு இந்தப் பேச்சுவார்த்தை நீடித்தது. அதன் பிறகு இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது மோடி கூறியதாவது: இந்தியாவுக்கு வலிமை அளிக்கும் தூணாக ரஷியா திகழ்கிறது. அது இந்தியாவின் மிக முக்கிய பாதுகாப்புக் கூட்டாளியாகத் தொடர்ந்து நீடிக்கும். அதிபர் புதினும் நானும் புதிய பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதித்தோம்.

"இந்தியாவில் தயாரிப்போம்' உள்ளிட்ட நமது முன்னுரிமைத் திட்டங்களுடனும் பாதுகாப்பு உறவுகளை எவ்வாறு இணைப்பது என்பது குறித்தும் பேசினோம். ரஷியா தனது அதிநவீன ஹெலிகாப்டரை இந்தியாவில் தயாரித்துத் தர முன்வந்திருப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். அது, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது. அந்த ஹெலிகாப்டர் ராணுவத்துக்கும், பொதுப் பயன்பாட்டுக்கும் உகந்ததாகும். அணு மின்சக்தித் துறையில் இரு தரப்பும் லட்சியத் திட்டத்தை வகுத்துள்ளன. அதன்படி, குறைந்தபட்சம் 10 அணு உலைகள் அமைக்கப்படும். அவை உலகத் தரத்தில் இருக்கும். இந்தத் திட்டத்தில் கருவிகள், உதிரி பாகங்கள் ஆகியவற்றை இந்தியாவிலேயே தயாரிப்பதும் அடங்கும் என்றார் மோடி.

அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை, செய்தியாளர்களிடம் புதின் பேசியதாவது:
மோடியுடன் நான் நடத்திய பேச்சுவார்த்தை யதார்த்தமானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் அமைந்திருந்தது. கூட்டு உயர் தொழில்நுட்பத் திட்டங்களை ரஷியா ஆதரிக்கும். இந்தியாவும் ரஷியாவும் நீண்ட காலமாக பாதுகாப்புத் துறையில் ஒத்துழைத்துச் செயல்பட்டு வருகின்றன. தற்போது இரு நாடுகளும் ராணுவத் தளவாடங்களை கூட்டாகத் தயாரிக்கும் நிலையை எட்டியுள்ளன. இந்தியாவில் ராணுவத் தளவாடங்களைத் தயாரிப்பதை ரஷியா எதிர்க்கவில்லை. ஏற்கெனவே இரு நாடுகளும் பிரம்மோஸ் ஏவுகணைத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தின. ஜெட் போர் விமானத்தைக் கூட்டாகத் தயாரிப்பது குறித்து விவாதித்து வருகின்றன என்றார் புதின்.

ஒப்பந்தங்கள் கையெழுத்து: முன்னதாக, இரு நாடுகளுக்கும் இடையே மோடி, புதின் முன்னிலையில் பாதுகாப்பு, மருத்துவம், எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட துறைகளில் 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அவற்றில் ஆயில் இந்தியா நிறுவனத்துக்கும், ரஷியாவின் ஜருபேஸ்நெஃப்ட் நிறுவனத்துக்கும் இடையே புதிய ஹைட்ரோகார்பன்களைக் கண்டறிவது, உற்பத்தி செய்வது ஆகியவற்றுக்கான ஒப்பந்தமும் அடங்கும். மேலும், இந்தியாவின் எஸ்ஸார் நிறுவனத்துக்கும் ரஷியாவின் ரோஸ்நெஃப்ட் நிறுவனத்துக்கும் இடையேயான கச்சா எண்ணெய் விநியோகம் தொடர்பான ஒப்பந்தம், டாடா பவர் நிறுவனத்துக்கும், ரஷியாவின் நேரடி முதலீட்டு நிதியத்துக்கும் இடையிலான எரிசக்தித் துறை ஒப்பந்தம் ஆகியவையும் அடங்கும். இந்தியாவின் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கும், ரஷியாவின் டாஸ் செய்தி நிறுவனத்துக்கும் இடையில் செய்திப் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தமும் மேற்கண்ட 20 ஒப்பந்தங்களில் அடங்கும்.

பயங்கரவாத ஒழிப்பு: இதனிடையே, இரு நாடுகளும் வெளியிட்ட கூட்டறிக்கையில், ஜம்மு-காஷ்மீரிலும், ரஷியாவின் செசன்யா பகுதியிலும் பயங்கரவாதிகள் சமீபத்தில் நடத்திய தாக்குதலில் இறந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பயங்கரவாதிகளுக்கான அனைத்துப் புகலிடங்களும் தாமதமின்றி ஒழிக்கப்படும் என்றும் பத்தாண்டுகளுக்குள் பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்படும் என்றும் அந்தக் கூட்டறிக்கையில் இரு நாடுகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளன. பாதுகாப்புத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை இந்தியா 49 சதவீதமாக அதிகரித்துள்ளது. இரு தரப்பும் வாய்ப்புகளை நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொண்டு பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்திக் கொள்ளும் என்று அந்தக் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 12 அணு உலைகளை அமைக்கிறது ரஷியா : பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், இந்தியாவில் வரும் 2035ஆம் ஆண்டுக்குள் 12 அணு உலைகளை ரஷியா அமைத்துத் தரவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இரு தரப்புக்கும் இடையே கையெழுத்தாகியுள்ளது. தவிர, கூடங்குளத்தில் 3, 4ஆம் அணு உலைகளை அமைப்பது தொடர்பாக இந்திய அணு மின் நிறுவனத்துக்கும், ரஷியாவின் ஏஎஸ்இ நிறுவனத்துக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மேலும், ரஷியாவில் உள்ள ராணுவக் கல்வி நிறுவனங்களில் இந்திய ராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பதற்கும் இரு தரப்பும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media