BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 13 December 2014

மேற்கு வங்க அமைச்சர் மதன் மித்ரா கைது

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் மேற்கு வங்க போக்குவரத்துத் துறை அமைச்சர் மதன் மித்ராவை சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இது, மேற்கு வங்க அரசுக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது. சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு மதன் மித்ராவுக்கு சிபிஐ அதிகாரிகள் கடந்த மாதம் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். ஆனால், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதனால், விசாரணை தள்ளிப்போனது. கடந்த நவம்பர் 26ஆம் தேதி அவர் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இதையடுத்து அவரை விசாரணைக்கு வருமாறு சிபிஐ அதிகாரிகள் அழைத்தனர். இதையடுத்து, அவர் கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை காலை சென்றார். அவரிடம் அதிகாரிகள் 5 மணிநேரம் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்த சிறிது நேரத்தில் மதன் மித்ரா கைது செய்யப்பட்டார். அவர், சாரதா குழுமத்தின் ஓர் அங்கமான சாரதா ரியால்டி நிறுவனத்தின் மூலம் சதி, ஏமாற்றுதல், பணம் கையாடல் ஆகியவற்றைச் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சாரதா ரியால்டி நிறுவனம், மேற்கு வங்கத்தில் ரியல் எஸ்டேட் சேவையை செய்து வந்தது.

அமைச்சரைத் தவிர, சாரதா நிதி நிறுவனத்தின் தலைவர் சுதிப்தா சென்னின் ஆலோசகராக செயல்பட்ட நரேஷ் பலோடியாவையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். முன்னதாக, அமைச்சர் மதன் மித்ரா, சிபிஐ அலுவலகம் சென்றதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிதி நிறுவன மோசடி வழக்கில், இதற்கு முன், திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 எம்.பி.க்களான குணால் கோஷ், சிருஞ்சய் போஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மம்தா பதவி விலகக் கோரிக்கை: சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் மேற்கு வங்க போக்குவரத்துத் துறை அமைச்சர் மதன் மித்ரா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முதல்வர் மம்தா பானர்ஜி ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அந்த மாநில எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இது தொடர்பாக பாஜக தேசியச் செயலாளர் சித்தார்த் நாத் சிங் கூறியதாவது: இந்த மோசடி வழக்கு விசாரணை மெதுவாக மம்தாவின் வீட்டை நோக்கிச் செல்கிறது. இந்த ஊழலில் திரிணமூல் காங்கிரஸ் தலைமை கழுத்து வரை ஊறித் திளைப்பதை மதன் மித்ராவின் கைது காட்டுகிறது. இந்த விவகாரத்தில் தார்மிகப் பொறுப்பேற்று மம்தா பானர்ஜி ராஜிநாமா செய்ய வேண்டிய நேரம் இது. தற்போது குணால், சிருஞ்சய், மதன் ஆகியோர் சிறையில் உள்ளனர். இந்த வரிசையில் அடுத்ததாக முகுல், மம்தா ஆகியோர் இனிவரும் ஆண்டுகளில் இடம்பெறுவார்கள் என்றார் சித்தார்த் நாத் சிங். மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சூர்யகாந்த மிஸ்ரா கூறுகையில், ""சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக முதல்வர் மம்தாவிடம் உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும்'' என்று வலியுறுத்தினார்.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.யான முகமது சலீம் கூறியதாவது: மதன் மித்ரா ஓர் அமைச்சர் மட்டுமின்றி, மம்தா பானர்ஜியின் நெருங்கிய சகாவாகவும் இருக்கிறார். திரிணமூல் காங்கிரஸ் நடத்தும் பொதுக்கூட்டங்களுக்கு ஆள்களைத் திரட்டும் நபராகவும் இருக்கிறார். மேற்கு வங்க மக்கள் தற்போது பொறுமை இழந்து வருகின்றனர். சாரதா நிதி நிறுவன விவகாரத்தில் மேலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர் என்றார் அவர்.மதன் மித்ரா கைது விவகாரம் தொடர்பாக மம்தா விளக்கமளிக்க வேண்டும் என்று மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் அப்துல் மன்னனும் கோரியுள்ளார். குணால் கோஷுக்கு காவல் நீட்டிப்பு: இதனிடையே, சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. குணால் கோஷின் நீதிமன்றக் காவல் இம்மாதம் 22ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை:  மாநில அமைச்சர் மதன் மித்ரா கைது செய்யப்பட்டது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கொல்கத்தா தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தற்போது நடந்துள்ளது (அமைச்சர் கைது) சட்டவிரோதம் மட்டுமின்றி, அரசியல் சாசனத்துக்கு எதிரானதுமாகும். ஜனநாயக அமைப்புகளைச் சீர்குலைப்பதற்கான அபாயகரமான நடவடிக்கை இது. மதன் மித்ராவின் கைதைக் கடுமையாகக் கண்டிக்கிறேன். இது பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை மட்டுமின்றி, மலிவான சதிச் செயலுமாகும். என்னை முதலில் கைது செய்யுமாறு பிரதமரைக் கேட்டுக் கொள்கிறேன். இந்த வழக்கில் மதன் மித்ராவை முதலில் சாட்சி என்று கூறினர். தற்போது அவரைக் கைது செய்துள்ளனர். மதன் மித்ராவை மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அதிகாரிகள் அழைத்துச் செல்லும்போது அங்கு அவரைச் சந்திக்க உள்ளேன். நரேந்திர மோடியும் அமித் ஷாவும் தங்களிடம் உள்ள போலீஸாரைக் கொண்டு என்னைக் கைது செய்யட்டும். அவர்களின் முகத்திரையைக் கிழிப்போம். அவர்களை எதிர்த்து நாங்கள் தில்லியில் போராட்டம் நடத்துவோம். சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்ட ஒரு நபர் (அமித் ஷா) தற்போது எங்களை நோக்கி புகார் கூறுகிறார். மதன் மித்ரா கைதைக் கண்டித்து திரிணமூல் காங்கிரஸ் சனிக்கிழமை முதல் தெருக்களில் இறங்கிப் போராடும். இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்திலும் எழுப்புவோம் என்றார் மம்தா.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media