BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 15 December 2014

போதைப் பொருள் தவிர்ப்பு உதவி மையம் : பிரதமர் மோடி அறிவிப்பு

"இளைஞர்களிடையே பரவும் போதைப் பொருள் பழக்கத்தை தவிர்க்க சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் கூட்டாகச் செயல்பட வேண்டும்' என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். போதைப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு உதவ கட்டணமில்லா "உதவி மையம்' விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக வானொலியில் "மனதோடு பேசு' எனும் நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்று, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை: இளைஞர்களிடையே பரவும் போதைப்பழக்கம் தேசத்தின் வலியாகும். இளைஞர்கள் போதைக்கு அடிமையாகியுள்ளனர். அவர்கள் போதைப்பொருள்கள் பயன்படுத்துவதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். போதைப் பழக்கத்துக்கு ஆளாவதால் இருள் சூழும், அழிவும், பேரழிவும் ஏற்படும். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, திரைப்பட பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்பட பிற துறைகளில் பிரபலமானவர்களைக் கொண்டு "போதை இல்லாத இந்தியா' எனும் பிரசாரம் நடத்த முயற்சி மேற்கொள்வேன். மது இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்.

நீண்ட நாள்களாக, இளைய தலைமுறையினரை நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன். சிலர் அழிவை ஏற்படுத்தும் புதைகுழிக்குள் விழுந்துள்ளனர். போதைப்பொருள் ஒரு பேரழிவாகும். இது மனம், சமூகம், மருத்துவம் சார்ந்த ஒரு பிரச்னையாகும். இந்தப் பிரச்னையைப் போக்க குடும்பத்தினர், நண்பர்கள், சமூகத்தினர், அரசு, சட்டத் துறையினர் என அனைவரும் கூட்டாகச் செயல்பட வேண்டும். இந்தப் பிரச்னை குறித்து ஆலோசனை வழங்க "கட்டணமில்லா உதவி மையம்' தொடங்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளேன். போதைப்பழக்கத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் ஓர் சிறப்பு நிகழ்ச்சியைத் தொடங்கவும் அறிவுறுத்தியுள்ளேன். போதைப்பொருள் குறித்து நான் உரையாற்றுவேன் என்று முன்னர் வானொலி நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தேன். அதுதொடர்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்கள், மின்னஞ்சல்கள் பொதுமக்களிடம் இருந்து வந்துள்ளன. அவை, போதைப்பொருளுக்கு எதிரான ஆலோசனைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டது என்பதையே காட்டுகின்றன.

இளைஞர்கள் தங்களுக்கு போதைப் பழக்கம் இல்லை என்பதைக் கூறிகொள்ள ஆர்வம் காட்ட வேண்டும். போதைப்பொருளைப் பயன்படுத்துவது நவநாகரிகம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அவற்றில் உண்மையில்லை. அவை உங்களை பேரழிவுக்கே அழைத்துச் செல்லும். போதைப்பொருள்களை விலைகொடுத்து வாங்கும் இளைஞர்களுக்கு அந்தப் பணம் தீவிரவாதத்துக்கு பயன்படுகிறது என்பது தெரியுமா? இந்தியாவை நேசிக்கும் நீங்கள் எப்படி தீவிரவாதத்துக்கு உதவலாம்? பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கென நேரத்தை ஒதுக்கி அவர்கள் இலக்கை நிர்ணயிக்கவும், அதை அடையவும் செயல்பட வேண்டும். அவர்கள் உங்களிடம் மனம் திறந்து பேசவும், அவர்கள் தவறான பாதையில் செல்லாதவாறு இருக்கும் வகையிலும் பெற்றோர் செயல்பட வேண்டும் என்றார் மோடி. மோடி பெருமிதம்: சமீபத்தில் கண்பார்வையற்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் மோடியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இதை உரையின் போது குறிப்பிட்ட மோடி அந்த அணியைப் பாராட்டிப் பேசினார். அவர் மேலும் பேசியதாவது:

ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், மும்பை அணியை எதிர்த்து விளையாடி ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் அணி வெற்றிபெற்றது. சமீபத்தில்தான் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் வெள்ளப்பெருக்கால் பாதிப்படைந்தது. அந்த மாநிலத்தின் விளையாட்டு மைதானங்கள் நீரில் மூழ்கின. இந்த இடையூறுகள் இருந்த பின்னரும் அந்த மாநில அணி கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்றது. கிரிக்கெட் போட்டித் தொடரில் இது ஒரு உயர்ந்த வெற்றியாகும். அந்த அணியை நான் பாராட்டுகிறேன். ஜூன் 21}ஆம் தேதியை "சர்வதேச யோகா தினமாக' அறிவிக்க வேண்டும் என்று ஐநா சபையில் இந்தியா வலியுறுத்தியது. இத்தீர்மானத்தை ஐநா சபை ஏற்று அறிவித்துள்ளது. இதற்கு 177 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதுபோல, நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளை சர்வதேச தினமாகவும் ஐநா அறிவிக்கவுள்ளது. இத்தீர்மானத்துக்கு 166 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன என்றார் அவர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media